தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட ஓப்பனிங் கொண்ட ஹீரோக்களில் நடிகர் அஜீத்தும் ஒருவர். அவரது படம் வெளியாகும் போதெல்லாம் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும்.
அந்த வகையில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு தீபாவளிக்கு 2-நாட்கள் முன்னதாக அஜீத்தின் ‘ஆரம்பம்’ படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை பார்க்க தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
‘பில்லா’ வெற்றிக்குப் பிறகு விஷ்ணுவர்தன்–அஜீத் கூட்டணியில் உருவான படம் என்பதால், இதுவரை இல்லாத அளவிற்கு ‘ஆரம்பம்’ படத்திற்கு டிக்கெட் விற்பனையும் படுஜோராக நடந்தது. முதல் நாள் விற்பனையிலேயே ஒரு வாரத்திற்குண்டான டிக்கெட்டுகள் எல்லாம் விற்றுத் தீர்ந்தன.
பல்வேறு எதிர்பார்ப்புகளிடையே வெளியான ‘ஆரம்பம்’ படத்தின் வசூலும் இப்படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களுககு திருப்தியாக அமைந்தது. தீபாவளிக்கு வெளியாகும் படங்களுக்காக பல தியேட்டர்கள் ஏற்கெனவே புக் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த தியேட்டர்களில் மட்டும் ‘ஆரம்பம்’ 2 நாட்களுக்கு வெளியானது.
அதன்பிறகு தீபாவளிக்கு வெளியான ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘பாண்டிய நாடு’ படங்களின் வசூல் திருப்திகரமாக இல்லாததால், அந்த திரையரங்குகளில் காட்சிகள் குறைக்கப்பட்டு ‘ஆரம்பம்’ படம் திரையிடப்பட்டது.
‘ஆரம்பம்’ படம் வெளியான முதல் நாள் மட்டும் ரூ.10.20 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ரிலீஸாகி 6 நாட்கள் ஆகிய நிலையில் ரூ.50 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்துள்ளதாகவும் விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, வெளிநாடுகளிலும் ரிலீசான 3 நாட்களில் சுமார் 1.34 கோடி ரூபாயை வசூல் செய்து யு.கே.பாக்ஸ் ஆபீசில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
படத்தின் மொத்த பட்ஜெட் 60 கோடி ரூபாய். ஆனால் வெளியாகி 6 நாட்கள் ஆன நிலையிலேயே இந்த தொகையை நெருங்கிவிட்ட ‘ஆரம்பம்’ படத்தின் வசூல் தமிழகத்தின் பல்வேறு ஏரியாக்களிலும் எதிர்பார்த்த அளவுக்கு இருப்பதால் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. எனவே, இப்படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களும், ‘ஆரம்பம்’ படக்குழுவினரும் மிகுந்த மகிழ்ச்சியுடைந்துள்ளனர்.